கோலாலம்பூர், டிசம்பர்-27 – டிக் டோக்கில், குரங்குகளைக் கொல்லும் விஷத்தை விற்பதாக ஒரு வியாபாரிக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மலேசிய விலங்குகள் நலச் சங்கம் சார்பில் காஜாங் போலீஸ் தலைமையகத்தில் அப்புகார் செய்யப்பட்டது.
அண்மையில் கூட Crodex என்ற பெயரிலான அவ்விஷத்தை விளம்பரம் செய்யும் வீடியோவை அந்நபர் டிக் டோக்கில் பதிவேற்றியதாக, அச்சங்கத்தின் தலைவர் முகுணன் சுகுமாறன் கூறினார்.
வீடமைப்புப் பகுதி அருகே குரங்குக் கூட்டத்தை நோக்கி விஷம் கலக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை அவ்வாடவர் வீசுவது வீடியோவில் தெரிகிறது.
அப்பகுதி வாழ் மக்களைத் தொந்தரவு செய்து வரும் குரங்குகளை அழிக்க அதுவே சிறந்த வழியென்றும் அவர் கூறிக் கொள்கிறார்.
ஆனால், வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அது குற்றமாகுமென முகுணன் சுட்டிக் காட்டினார்.
அவரின் அச்செயல் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாமென முகுணன் சொன்னார்.
அவ்வியாபாரியின் செயல் மற்றவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணமாகி விடுமென்பதால், போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.