வாஷிங்டன், டிசம்பர்-28, அமெரிக்காவில் டிக் டோக்கை தடை செய்யும் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை டோனல்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னும் 3 வாரங்களில் முறைப்படி அதிபராகப் பொறுப்பேற்றதும், அவ்விவகாரத்திற்கு ‘அரசியல் ரீதியான’ தீர்வை ஏற்படுத்த தமக்கு கால அவகாசம் தேவை என அவர் சொன்னார்.
ஒருபுறம் பேச்சு சுதந்திர உரிமை; மறுபுறம் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு கவலை என ஒரு புதுமையான அதே சமயம் பதட்டத்தை கொண்டு வரும் வழக்காக இது விளங்குகிறது.
இரு பக்கமும் சமரசம் செய்துகொள்ளாமல் ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு தமக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த தாய் நிறுவனத்திடமிருந்து ஜனவரி 19-ஆம் தேதிக்குள் பிரிந்து விடவில்லை என்றால், அமெரிக்க மண்ணை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு டிக் டோக் தள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தடுத்து நிறுத்த டிக் டோக்கிற்கு கடைசி நம்பிக்கையாக இருப்பது உச்ச நீதிமன்றம் மட்டுமே.
இந்நிலையில் தான், டிக் டோக்கை இன்னும் கொஞ்ச காலத்திற்கு அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட தாம் அனுமதிக்கக் கூடுமென டிரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார்.
தற்போது, அவரே உச்ச நீதிமன்றத்தை அணுகி டிக் டோக் தடையுத்தரவை நிறுத்தி வைக்க விண்ணப்பித்திருப்பதால், டிக் டோக் சற்று நிம்மதியடைந்துள்ளது.