
ஈப்போ, ஜனவரி-28 – பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் மற்றும் உரிமைக் கட்சியைச் சேர்ந்த சதீஸ் முனியாண்டி இடையிலான டிக் டோக் சர்ச்சை நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது.
சதீஸ் வெளியிட்ட வீடியோ அவதூறானது எனக் கூறி, சிவநேசன் வழக்குத் தொடுத்துள்ளார்.
தனது கட்சிக்காரருக்கு எதிராக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டிருப்பதை, சத்தீஸின் வழக்கறிஞர் Shamsher Singh Thind உறுதிப்படுத்தினார்.
கடந்தாண்டு ஜூன் 8-ஆம் தேதி பதிவேற்றிய வீடியோவில், சதீஸ் தம்மை “குடிகாரர்” எனக் குறிப்பிட்டதோடு, அரசாங்கப் பதவியில் இருக்க தாம் தகுதியற்றவர் என்ற ரீதியிலும் பேசியதாக சிவநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வீடியோவை நீக்கக் கோருவதோடு, நஷ்ட ஈடும் கோரும் சிவநேசன், இந்த மானநட்ட வழக்கு முடியும் வரை சதீஸோ அவரைச் சார்ந்தவர்களோ மேற்கொண்டு அவதூறு பரப்ப நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.



