
கோலாலம்பூர், நவ 20 – எதிர்வரும் டிசம்பர் 3 ஆம்தேதி புதன்கிழமை மலேசியாவில் திருக்கார்த்திகை உபய விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இதனை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸதானத்தின் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயிலில் சிறப்பு பூசைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பதோடு மாலையில் சொக்கப்பானை கொழுத்தும் நிகழ்வும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயிலில்
அபிசேகங்கள் மற்றும் ஆறுகால பூசைகளும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் மேற்குகைக் கோயில்களுக்கு செல்லும் படிக்கட்டுகளில் பக்தர்களால் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு பக்தி பரவசத்துடன் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது சமூகத்தில் ஒற்றுமையும் ஆன்மீக ஒளியையும் அதிகரிக்க வேண்டும் என்பதால் இவ்வாண்டு நடைபெறும் திருக்கார்த்திகை திருவிழா நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி டான்ஸ்ரீ நடராஜா அறைகூவல் விடுத்துள்ளார்.



