டுங்குன், நவ 21 – டுங்குனில் பந்தாய் தெலுக் லீபாட் கடற்கரைக்கு அருகே உள்ள சாலையில் ஆமை ஒன்று முட்டையிடுவதற்கு சிரமப்பட்டதை கண்ட இளைஞர் ஒருவர் அந்த ஆமையை கடற்கரைப் பகுதிக்கு கொண்டுச் சென்று விட்ட காணொளி வைரைலானத் தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு 10 மணியளவில் கார் ஓட்டிச் சென்றபோது தனது காரை நிறுத்தும்படி ஒருவர் கையால் சைகை காட்டுவதை கண்டதாக 53 வயதுடைய தெங்கு அஸிஸ் ( Tengku Aziz ) என்பவர் தெரிவித்தார். யாரோ விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நினைத்து காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோதுதான் சாலையின் நடுவே இருந்த ஆமை முட்டையிடுவதற்கு சிரமப்பட்டதை கண்டதாகவும் அந்த ஆமை பெரிதாகவும் கனத்த எடையில் இருந்ததால் அதனை கடலோர பகுதிக்கு தம்மால் கொண்டுச் சென்று விடமுடியவில்லை என்று அவர் கூறினார்.
அங்கு வந்த இளைஞர் அந்த ஆமையை மனிதாபிமானத்தோடு கடற்கரை பகுதிக்கு கொண்டு விட்டதால் அந்த ஆமை உயிர் தப்பியதாக தெங்கு அஸிஸ் தெரிவித்தார். கடற்கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள சாலைக்கு செல்லும் முன் ஆமை முட்டையிட மேலே சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.