கலிஃப்போர்னியா, நவம்பர்-6 – டெங்கிக் காய்ச்சல், ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை எதிர்த்து போராடும் முயற்சியில், அறிவியலாளர்கள் வித்தியாசமான அணுகுமுறையைத் தீர்வாக முன்வைத்துள்ளனர்.
ஆண் கொசுக்களை செவிடாக்கி, அவற்றை இனச்சேர்க்கையில் ஈடுபடாமல் தடுப்பதே அப்புதிய அணுகுமுறையாகும்.
இதனால் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியுமென அமெரிக்கா, கலிஃபோர்னியா ஆராச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நடு வானில் பறக்கும் போது அவற்றின் கேட்கும் திறனைப் பொருத்து கொசுக்கள் இனவிருத்தி செய்யும்.
அதாவது பெண் கொசுக்களின் கவர்ச்சியான ஒலியால் ஈர்க்கப்பட்டே ஆண் கொசுக்கள் இனவிருத்திக்கு ஆயத்தமாகும்.
எனவே ஆண் கொசுக்களைச் செவிடாக்கி விட்டால், இனவிருத்தி நடக்காது, கொசுக்களின் ஜனத்தொகையும் இயல்பாகவே குறைந்து விடும் என விஞ்ஞானிகள் கணக்குப் போட்டுள்ளார்கள்.
சோதனை நடத்தப்பட்டதில், செவிடாக்கப்பட்ட ஆண் கொசுக்களை பெண் கொசுக்களுடன் ஒரே கூண்டில் வைத்த போதும், 3 நாட்களாகியும் அவை ஒன்று சேரவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த அறிவியல் புரட்சி நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, மனிதர்களின் சுயநலத்துக்காக இயற்கை விதிகளை மீறுவது நியாயமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.