வாஷிங்டன், நவம்பர்-26 – அமெரிக்க அதிபராக ஜனவரியில் டோனல்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில், பதவி விலகிச் செல்லும் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார்.
தனது கணவருடன் முதல் பெண்மணி ஜில் பைடனும் (Jill Biden) அதில் கலந்துகொள்ளவிருப்பதை வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியது.
அதிபராக யார் வெற்றிப் பெற்றாலும், பதவியேற்பில் பங்கேற்பதென்ற வாக்குறுதியை பைடன் காப்பாற்றுவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.
2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப் பெற்ற போது, அதிகாரப்பூர்வமாக தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப், பைடனின் பதவியேற்பைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வரலாற்றில், தனக்கு அடுத்து அதிபராகப் பொறுப்பேற்பவரின் பதவியேற்புச் சடங்கில் பங்கேற்காமல் புறக்கணித்த நான்காவது அதிபராக அப்போது டிரம்ப் பெயர் பதித்தார்.
ஆனால், அதனை மனதில் வைத்துக்கொள்ளாமல், டிரம்பின் பதவியேற்பில் பைடன் பங்கேற்பதன் மூலம், வெள்ளை மாளிகையின் பாரம்பரியத்தை அவர் மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.
ஜனவரி 20-ஆம் தேதி வாஷிங்டனில் அமெரிக்காவின் 47-வது அதிபராக 78 வயது டிரம்ப் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்.