
புத்ராஜெயா, ஜனவரி-23 – Apple S முத்திரையிலான மிட்டாய்களில் sibutramine எனப்படும் பசியைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1985-ஆ,ம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் அம்மிட்டாய்களை விளம்பரப்படுத்தவோ அல்லது விற்கவோ தடையிருப்பதாக சுகாதார அமைச்சான KKM கூறியது.
எனவே இணைய வியாபாரிகள் உட்பட அனைத்து வியாபாரிகளிடமும் அம்மிட்டாய் கையிருப்பு இருந்தால், அவற்றின் விற்பனையை உடனடியாக நிறுத்தி விட வேண்டும்;
அதோடு அவை சீல் வைக்கப்பட ஏதுவாக அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகங்களை நாடுமாறும் KKM கேட்டுக் கொண்டது.
சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து மின்னியல் வர்த்தகத் தளங்களும் இந்த Apple S மிட்டாய்களின் விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதை வாங்கி சாப்பிட்ட பொது மக்களும் அதன் பயன்பாட்டை நிறுத்தி விட்டு, மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனையும் அறிவுரையும் பெறுமாறு அமைச்சு கேட்டுக் கொண்டது.
இம்மிட்டாய்களை உண்பதால் கடுமையான பக்க விளைவுகளைத் தவிர, வாய் வறட்சி, குமட்டல், மலச்சிக்கல், தூங்குவதில் சிரமம், தலைச்சுற்றல், மாதவிடாய் பிடிப்புகள் போன்ற இலேசான பக்க விளைவுகளும் ஏற்படுவதை KKM சுட்டிக் காட்டியது.