
வாஷிங்டன், ஜூலை-9 – அமெரிக்கா ‘எதிரியாக’ பார்க்கும் BRICS நாடுகளுக்கு கூடிய விரைவிலேயே 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுமென, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எனினும் அது எப்போது அமலில் வரும் என அவர் தெரிவிக்கவில்லை.
BRICS கூட்டமைப்பின் வருடாந்திர உச்ச நிலை மாநாடு பிரேசிலில் நடைபெற்று முடிந்த அடுத்த நாள் இந்த மிரட்டல் வந்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை அடிப்படை உறுப்பினராகக் கொண்ட BRICS அமைப்பு, கடந்தாண்டு ஈரான், இந்தோனேசியா போன்ற நாடுகளையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டது.
மலேசியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் BRICS-சில் அங்கத்துவம் பெற விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற BRICS உச்ச நிலை மாநாட்டில் பேசிய தலைவர்கள், அமெரிக்காவின் இராணுவ மற்றும் வாணிபக் கொள்கைகள் குறித்து மறைமுகமாகத் தாக்கினர்.
ஏற்கனவே BRICS மீது ‘கடுப்பிலிருக்கும்’ ட்ரம்ப் இதனால் மேலும் சினமடைந்தார்.
அமெரிக்க டாலரை மதிப்பிழக்கச் செய்வதே, சீனா – ரஷ்யா தலைமையிலான BRICS அமைப்பின் உண்மையான நோக்கம் என்றும், அப்படி நடந்தால் அது ஒரு புதிய உலகப் போருக்கே சமம் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
ஆனால் வழக்கம் போல் அவற்றுக்கு ஆதாரங்களை அவர் காட்டவில்லை.
இவ்வாண்டு BRICS அமைப்புக்குத் தலைமையேற்றுள்ள பிரேசில், அதன் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையில் ஒரே பொதுவான நாணயத்தைப் பயன்படுத்தும் பரிந்துரையை முன்வைத்துள்ளதும் கவனிக்கத்தக்கது.