
கோலாலம்பூர், ஜனவரி-18-நாட்டில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது, தமிழ் சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தையே அச்சுறுத்தக்கூடும் என, பினாங்கு இந்து இயக்கமான PHA எச்சரிக்கை விடுத்துள்ளது.
2023-ல் 11,712 மாணவர்கள் முதலாமாண்டில் பதிந்த நிலையில், இவ்வாண்டு அது 10,330 ஆகக் குறைந்துள்ளது.
இந்த சரிவு, பள்ளிகள் மூடப்படுதல், ஆசிரியர்கள் வேலை இழப்பு, பாரம்பரியம் சிதைவு ஆகிய அபாயங்களை உருவாக்கலாம் என, PHA தலைவர் டத்தோ பி. முருகையா கவலைத் தெரிவித்தார்.
இந்தியர்கள் மத்தியில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது, தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவுக்கு நேரடி காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.
மலேசிய புள்ளிவிபரத்துறை தரவுகளின் படி, இந்தியர்களின் மக்கள் தொகை 6.5% என்ற நிலைமையில் நின்றுவிட்டது.
பிறப்பு விகிதமும் 2024-ல் 4.3%-டாக இருந்த நிலையில், 2025-ல் 3.9%-தாகக் குறைந்துள்ளது.
தொழில் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தும் இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதே மக்கள் தொகை சரிவுக்கு வழிவகுக்கிறது.
இதை மாற்ற, ‘சுயம்வரம்’ எனப்படும் திருமண அறிமுக நிகழ்வுகளை கடந்த 4 ஆண்டுகளாக PHA நடத்தி வருகிறது.
இலாப நோக்கமற்ற இந்நிகழ்ச்சி, திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்துப் பெற்றவர்கள், குழந்தைகள் உள்ளவர்கள் மற்றும் இல்லாதோர், கணவனை இழந்தவர்கள், தனித்து வாழும் தந்தை அல்லது தாய், உடல் ரீதியாக சவால்களை எதிர்கொள்வோர் என அனைவருக்குமான நிகழ்ச்சியாகும்.
திருமண விருப்பமுள்ள இந்துக்கள் சந்தித்து, குடும்பம் அமைக்கும் வாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
எனவே, கோவில்கள், இந்து அமைப்புகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் இளைஞர்களை திருமணத்துக்கு ஊக்குவிக்க வேண்டும் என PHA வலியுறுத்துவதாக முருகையா சொன்னார்.
இதன் மூலம் மக்கள்தொகை சரிவைக் கட்டுப்படுத்தி, தமிழ்ப் பள்ளிகளுக்கு புதிய உயிர் ஊட்டத்தை ஏற்படுத்தலாம் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



