தும்பாட், அக்டோபர்-18, தாய்லாந்திலிருந்து உயிரோடு கடத்திக் கொண்டு வரப்பட்ட 84 ஊர்வன விலங்குகள் கிளந்தான், தும்பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்காலான் கூபோர், கம்போங் மெந்துவாவில் பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில், பல்வேறு பாம்பு இனங்களும், பெரிய பல்லிகளும், ஆமைகளும் அடங்கும்.
அவற்றின் மொத்த மதிப்பு 302,500 ரிங்கிட்டாகும்.
சுங்கை கோலோக் ஆற்றங்கரையில் சில ஆடவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொண்டதை அடுத்து, PGA எனப்படும் பொது நடவடிக்கைக் குழு சோதனை நடத்திய போது அவ்விலங்குகள் சிக்கின.
அதிகாரிகள் வருவதை கண்ட அவ்வாடவர்கள், தாங்கள் கொண்டு வந்த பெட்டிகளை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டனர்.
பெட்டிகளைத் திறந்துப் பார்த்ததில், உயிருள்ள 70 பாம்புகள், 5 பெரிய பல்லிகள், 9 ஆமைகள் ஆகியவை அவற்றிலிருந்தன.
சுங்கத் துறை சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.