தாய்லாந்தில் கைதான நபர் எல்லை தாண்டிய போதைப்பொருள் கும்பலின் ‘டிரான்ஸ்போர்ட்டர்’; போலீஸ் உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், நவம்பர்-10,
சுமார் RM9 மில்லியன் மதிப்பில் 75 கிலோ கிராம் கெட்டமைன் போதைப்பொருளுடன் தாய்லாந்தில் பிடிபட்ட மலேசிய நபர், எல்லை கடந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ‘டிரான்ஸ்போர்ட்டர்’ என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
25 வயது அவ்வாடவர் கெடா, சுங்கை பட்டாணியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு 4 பழையக் குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
“சந்தேக நபருக்கு மலேசியாவில் போதைப்பொருள் கட்டமைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; அவர் அக்கும்பல்களுக்காக போதைப் பொருளைக் கடத்தி வந்துள்ளார்” என ஹுசேய்ன் சொன்னார்.
அம்மலேசியர் முன்னதாக Chumphon மாகாணத்தில் ஒரு சாலைத் தடுப்புச் சோதனையின் போது தாய்லாந்து போலீஸிடம் சிக்கினார்.
அவரது காரின் பின்புறத்தில் ஓர் இரகசிய பெட்டியில் அந்த போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
தெற்கு தாய்லாந்து வழியாக எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில், அந்தச் சாலைத் தடுப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.



