குண்டூர் (ஆந்திரா) , செப்டம்பர் -23 – ஆந்திரா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பில், ஆந்திர மாநில துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் பரிகார பூஜையைத் தொடங்கியுள்ளார்.
நடந்தவற்றுக்கு திருப்பதி ஏழுமலையானிடம் மன்னிப்புக் கோருவதற்காக, 11 நாள் பரிகார விரதத்தை அவர் தொடங்கினார்.
குண்டூர், தசாவதார வெங்கடேஸ்வர கோயிலில் சிறப்புப் பூஜைகள், அபிஷேகம் ஆகியவற்றை அவர் மேற்கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
பிரபல நடிகருமான பவன் கல்யாண், திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது உறுதிச் செய்யப்பட்ட போதே, அது குறித்து ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஆட்சியின் போது திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்பட்டதாக ஆய்வுக் கூட அறிக்கைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து விரிவான அறிக்கை வேண்டுமென இந்திய அரசாங்கமும் உத்தரவிட்டுள்ளது.