
பாசீர் மாஸ், பிப்ரவரி-17 – கிளந்தானில் விருந்தினராக நுழைந்து திருமண வீட்டிலிருந்து 2,500 ரிங்கிட்டைத் திருடி வைரலான மூதாட்டி ஒருவழியாகக் கைதாகியுள்ளார்.
61 வயது அம்மாதுவும், அவரின் நண்பரான 62 வயது டேக்சி ஓட்டுநரும், கோத்தா பாருவில் சனிக்கிழமை மாலை கைதாகினர்.
சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட காரை பின் தொடர்ந்த போலீஸ், ஒரு கட்டத்தில் ஓட்டுநரை நிறுத்தச் சொல்லி பரிசோதித்தது.
பிறகு இருவரும் கைதுச் செய்யப்பட்டதாக, பாசீர் மாஸ் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Kama Azural Mohamed கூறினார்.
கைதான மூதாட்டி கிளந்தான், திரங்கானு, பேராக் ஆகிய மாநிலங்களில் 10 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
அதே சமயம், பாச்சோக்கைச் சேர்ந்த அந்த டேக்சி ஓட்டுநருக்கு 1 குற்றப்பதிவு உள்ளது.
விசாரணைக்காக இருவரும் இன்று முதல் தடுத்து வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதத் தொடக்கத்தில் டிக் டோக்கில் வைரலான ஒரு வீடியோவில், கழிப்பறக்குச் செல்வதாகக் கூறி திருமண வீட்டுக்குள் நுழைந்த அம்மாது, அலமாரியின் மேல் பணம் வைக்கப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினார்.
எனினும், வரவேற்பறையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் அவரது உருவம் பதிவாகியதால், போலீஸ் அவரை தீவிரமாகத் தேடி வந்தது.