கோத்தா பாரு, அக்டோபர்-16 – தீபாவளி விடுமுறையின் போது தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள மலேசியர்களின் பாதுகாப்புக்கு, அந்நாட்டு போலீஸ் உத்தரவாதமளித்துள்ளது.
அவ்வகையில், சுற்றுப் பயணிகள் பாதுகாப்பாக உணருவதை உறுதிச் செய்வதற்குண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக, நாராத்திவாட் (Narathiwat) மாநில போலீஸ் தலைவர் கூறினார்.
நாராத்திவாட் உள்ளிட்ட தாய்லாந்தின் தென்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருவதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல்காரர்கள், போலீசையும், அமுலாக்க தரப்புகளையும் குறி வைத்துள்ளனர்.
இதனால் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான இடங்களிலேயே பெரும்பாலான தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், பொது மக்கள் மட்டுமின்றி, கிளந்தான் வாசிகள் உள்ளிட்ட மலேசிய சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தீபாவளி விடுமுறையில் தாய்லாந்து செல்வோர், அதிக கவனமுடன் இருக்க வேண்டுமென தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) முன்னதாக மலேசியர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அக்டோபர் 9-ஆம் 10-ஆம் தேதிகளில் தென் தாய்லாந்து வட்டாரங்களில் நன்கு திட்டமிடப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, IGP அவ்வாறு அறுவுறுத்தினார்.
பள்ளி மற்றும் பொது விடுமுறைகளின் போது கிளந்தான், பெர்லிஸ், கெடா வாயிலாக மலேசிய சுற்றுப் பயணிகள் தாய்லாந்து செல்வது வழக்கமாகும்.
ஷாப்பிங் செய்வதோடு, மலிவான மற்றும் சுவையான தாய்லாந்து உணவுகளைச் சுவைக்கவும் அவர்கள் அங்குச் சென்று வருகின்றனர்.