
இஸ்தான்புல், ஜூலை-7 – தென் துருக்கியேவில் உள்ள விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பித்த சிங்கம் ஓர் ஆடவரைத் தாக்கி காயம் விளைவித்ததால், சுட்டுக் கொல்லப்பட்டது.
Zeus என்ற பெயரைக் கொண்ட அந்த ஆண் சிங்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கூண்டிலிருந்து தப்பியோடியது.
அப்போது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டப் பணியாளர் மீது பாய்ந்து சிங்கம் தாக்கியது.
தாக்கி விட்டு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடி மறைந்த சிங்கத்தைப் பிடிக்க மாபெரும் தேடுதல் வேட்டைத் தொடங்கியது.
பொது மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பாக அதனை உயிரோடு பிடிக்க முடியாது என்ற காரணத்தாலும் அதிகாரிகள் சிங்கத்தை சுட்டுக் கொன்றனர்.
சிங்கம் எப்படி கூண்டிலிருந்து தப்பியது, இது யாருடைய கவனக்குறைவு போன்றவற்றை கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.