கோலாலம்பூர், நவம்பர் 25 – ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுதல், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகளைப் பல விலங்குகள் நலன் பேணும் இயக்கங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கோலாலம்பூர் மாநகர் மன்றம் இந்நடவடிக்கைகளைப் புறந்தள்ளும் விதமாகத் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக விலங்குகள் நலன் விரும்பிகள் காட்டமாகப் புகார் அளித்துள்ளனர்.
சுய முயற்சியில் தெருவெங்கும் அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பாக DBKL செயல்படுவது நியாயமில்லை என்று குமுறி வருகின்றனர்.
நாய்களைப் பிடித்துச் செல்வதை விட, TNVR எனும் முறையைக் கையாளுவது நனிச்சிறந்தது என்கிறார் கைவிடப்பட்ட விலங்குகள் நலன் பேணும் SAFM சங்கத்தின் தலைவர் கலைவாணன்.
ஆகையால், தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையைக் குறித்து DBKL மீண்டும் மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முறையான வழிமுறைகளைக் கையாண்டால் அதனின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்கிறார் கைவிடப்பட்ட விலங்குகள் நலன் பேணும் SAFM சங்கத்தின் தலைவர் கலைவாணன்.