தெலுக் இந்தானில் சட்டவிரோத ‘Bitcoin’ இயந்திரங்கள் பறிமுதல்

தெலுக் இந்தான், நவம்பர் 11 – நேற்று, ஹிலீர் பேராக் (Hilir Perak) மாவட்ட காவல்துறை, ‘Tenaga Nasional Berhad’ மற்றும் மலேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனம் (CSM) ஆகிய அமைப்புகள் இணைந்து, தெலுக் இந்தானிலுள்ள தாமான் லெஜெண்டா (Taman Lagenda) பகுதியில் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோதமாக இயங்கி வந்த 66 ‘Bitcoin mining’ இயந்திரங்கள் வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டன.
மின்சாரத்தைத் திருடி, ‘Bitcoin’ இயந்திரங்களை இயக்கி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதென்று ஹிலீர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் பக்ரி ஸைனல் அபீடீன் (Bakri Zainal Abidin) தெரிவித்தார்.
இந்தச் சோதனையில், போலீசார் மொத்தம் 66 பிட்காயின் இயந்திரங்கள், மோடம் மற்றும் சில மின்சார கருவிகளைப் பறிமுதல் செய்ததோடு அவை அனைத்தையும் ஹிலீர் பேராக் மாவட்ட போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
குற்றவியல் மற்றும் மின்சாரம் வழங்கல் ஆகிய சட்டங்களுக்கு கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஈராண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.



