
கிள்ளான் , ஜன 28 – மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆதரவில் தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நாயன்மார் பெருவிழா கோலக்கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நீலாய், ஸ்ரீ மஞ்சா, போர்ட்கிள்ளான், தாமான் செந்தோசா, சிலாங்கூர் சைவ சமய மன்றங்களின் இணை ஏற்பாட்டில் சிவ வழிபாட்டோடு நடைபெற்ற இந்த விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
திருத்தொண்டரான நாயன்மார் பெருமக்களை அறிமுகப்படுத்துவதோடு அவர்தம் பக்தி வைராக்கிய திறத்தை அன்பர்க்கு உணர்த்துவதும் அப்பெருமக்களைச் சிவபெருமான் ஆட்கொண்ட திருவருட்செயலைப் போற்றுவதும் இவ்விழாவின் நோக்கங்கள் எனத் தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்தின் தலைவர் சிவத்திரு பூபாலன் பூவன் தனது வரவேற்புரையில் விளக்கினார்.
திருமுறைப் பாராயணம், திருமுறை பரதம், வில்லுப் பாட்டு, நாயன்மார் வரலாற்று கண்காட்சி, திருமுறைப் பண்ணிசை ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
மேலும் மலேசிய மண்ணில் களம் காணும் பெருந்திட்டமான சைவத் திருக்கோயில், கலை கல்லூரி திட்டம் மற்றும் திருப்பணி பற்றிய காணொளிக் காட்சி காட்டப்பட்டது.
மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் மருத்துவர் பழநியப்பன் எட்டிக் கவுண்டர் இத்திட்டத்தினைப் பற்றிய விளக்கம் அளித்தார். இவ்விழாவின் சிறப்பு அங்கமாக ‘நாயன்மார் நம் ஞானாசிரியர்’ என்னும் தலைப்பில் சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பூபாலன் பூவன் சைவத் திருக்கோயில், கலை கல்லூரி திருப்பணிக்காக தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்தின் சார்பில் 10,000 ரிங்கிட் நன்கொடையை முனைவர் நாகப்பன் ஆறுமுகத்திடம் வழங்கினார்.