
கோலாலாம்பூர், ஜூலை-26- ETSI எனப்படும் செமிகண்டக்டர் தொழில்துறைக்கான பொறியியல் திறமை திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக, CREST மற்றும் HRD CorpP இடையில் ஒரு வியூக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
செமிகண்டக்டர் துறையில் 15,000 மாணவர்கள், பட்டதாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை மேம்படுத்துவதை இந்த MoU நோக்கமாகக் கொண்டுள்ளது.
HRD Corp சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி Dr சைட் அல்வி முஹமட் சுல்தான் (Dr Syed Alwi Muhammad Sultan), CREST சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜஃப்ரி இப்ராஹிம் (Jaffri Ibrahim) இருவரும் அதில் கையெழுத்திட்டனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முதலீடு-வாணிபம்-தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் அப்துல் அசிஸ் (Datuk Seri Zafrul Abdul Aziz), மனிதவள அமைச்சர்ஸ்டீவன் சிம் (Stevan Sim) ஆகியோர் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ETSI என்பது, 2030-ஆம் ஆண்டுக்குள் 60,000 பொறியாளர்களை இலக்காகக் கொண்ட தேசிய செமிகண்டக்டர்வியூகத்தின் கீழ் ஒரு முக்கிய அங்கமாகும்.
மலேசியா இப்போது முடிவுகள் சார்ந்த, தரவு சார்ந்த மற்றும் தொழில்துறை மையப்படுத்தப்பட்ட பயிற்சி அணுகுமுறைக்கு மாறி வருவதாக, அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இன்றையக் காலக்கட்டத்தில் செமிகண்டக்டர் துறையில் நிலவும் போட்டி திறமையால் தீர்மானிக்கப்படுகிறது, வெறும் முதலீட்டால் மட்டும் அல்ல என்றார் அவர்.
ETSI திட்டம், மலேசியா மடானியின் அறிவு, நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொழிலாளர்களுக்கான மறு பயிற்சி, பாடத்திட்டங்களை வலுப்படுத்துதல், ஆரம்பகால தொழில்நுட்ப ஈடுபாடு மற்றும் R&D ஆராய்ச்சி -மேம்பாட்டு திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இவ்வேளையில், தொழில்துறை, மாணவர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கான எதிர்கால திறன் வழிகாட்டியாக, செமிகண்டக்டர் துறைக்கான பிரத்தியேக தொழில்துறை திறன் கட்டமைப்பை, HRD Corp-பின் தலைமை நிர்வாக அதிகாரி Dr சைட் அல்வி முஹமட் சுல்தான் அறிமுகப்படுத்தினார்.
அதே சமயம், ETSI திட்டம் IP படைப்பாளர்களையும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களையும்
உருவாக்குமென,CREST-டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜஃப்ரி இப்ராஹிம் (Jaffri
Ibrahim) கூறினார்.
இந்த வியூக ஒத்துழைப்பானது, மலேசியாவை இவ்வட்டார செமிகண்டக்டர் முன்னோடியாக உயர்த்தும் என்பதோடு, உலகளாவிய மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தி, திறமையை தேசிய வளர்ச்சியின் உந்துசக்தியாக மாற்றும் என நம்பிக்கைத் தெரிவிக்கப்பட்டது.