தைப்பிங்கில் துயர விபத்து; லாரியின் பின்புறத்தில் மோதிய கார் ஓட்டுநர் பலி

தைப்பிங், அக்டோபர்- 29,
கமுண்டிங் அருகேயுள்ள ஆயர் பூத்தே சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில், கார் ஒன்று லாரியின் பின்புறம் மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே கமுண்டிங் தீயணைப்பு நிலையத்திலிருந்து எட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) தற்காலிக இணை இயக்குனர் ஷாஸ்லீன் முகமட் ஹனாபியா (Shazlean Mohd. Hanafiah) தெரிவித்தார்.
புரோட்டான் வாஜா கார், சாலையில் பழுது பார்க்கும் பணியில் இருந்த மூன்று டன் லாரியின் பின்புறத்தை மோதியபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காரினுள் சிக்கியிருந்த ஓட்டுநரை தீயணைப்பு துறையினர் ‘ஹைட்ராலிக்’ கருவியின் உதவியுடன் வெளியேற்றிய போதும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



