கோலாலம்பூர், டிசம்பர்-5- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தைப்பூசத்திற்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தங்க இரதத்தைக் கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள புகார்களால் காரணமாகவே, அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அந்த தங்க இரதம் சொக்கத் தங்கத்திலானது எனக் கூறப்பட்டதில் உண்மையில்லை எனக் கூறி, சில மாதங்களுக்கு முன்னரே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-க்குப் புகார் போயிருக்கிறது.
அறப்பணி வாரியத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும் புகார் பெறப்பட்டிருப்பதை, MACC-யின் நம்பத்தகுந்த வட்டாரமொன்று கூறியதாக FMT செய்தி வெளியிட்டள்ளது.
MACC விசாரணைக்காக ராமசாமிக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
2010 முதல் 2023 வரை அவ்வாரியத்தின் தலைவராக இருந்தவர் Dr ராமசாமி.
அவரது பதவி காலத்தில், அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த எம்.ராமசந்திரனும் விசாரிக்கப்படுகிறார்.
நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத பொருட்களால் உருவாக்கப்ப தங்க இரதத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இது பொது நலனை உட்படுத்திய விவகாரம் என்பதால் அவ்விருவரையும் விசாரிக்க MACC முடிவுச் செய்தது.
இது போன்ற விசாரணைகளின் போது வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கமான நடைமுறையே என்றும் அவ்வட்டாரம் கூறியது.
அறப்பணி வாரியம் கூறிக் கொண்டது போலவே தங்க இரதத்தில் தங்க அளவு இருக்கின்றதா என்பதை கண்டறிய இராசயணத் துறையின் உதவியும் நாடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இவ்வேளையில் அக்குற்றச்சாட்டுகளை Dr ராமசாமி வணக்கம் மலேசியா-விடம் மறுத்துள்ளார்.
2019-ல் வாங்கப்பட்ட அந்த தங்க இரதம், தங்க முலாம் பூசப்பட்டது; மாறாக சொக்கத் தங்கம் அல்ல என ராமசாமி தெளிவுப்படுத்தினார்.
அதற்காக தரமற்றப் பொருட்களால் இரதம் உருவானதாகக் கூறுவது தவறான கூற்றாகும்.
800,000 ரிங்கிட் மதிப்பிலான அந்த தங்க இரத குத்தகை, திறந்த டெண்டர் முறையில் கொடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். அது பற்றி MACC-யிடம் நேற்று முழுமையான விளக்கம் அளித்ததாகவும் ராமசாமி கூறினார்.
அவ்விஷயத்தில் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டன; முறைகேடுகள் என்பதற்கே வாய்ப்பில்லை.
தேசியக் கணக்குத் தணிக்கை அலுவலகமே அறப்பணி வாரியத்தின் கணக்குகளை சரிபார்த்து தணிக்கைச் செய்துள்ளது.
இந்நிலையில், முழுமைப் பெறாத ஆவணங்கள் அடிப்படையில் MACC செயல்படுவதாக ராமசாமி மேலும் சொன்னார்.