
ஜாவி, பிப்ரவரி-5-பினாங்கு தண்ணீர் மலை தைப்பூச விழாவை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி தாரா ஸ்ரீ, சாலையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டு, வலது காலில் கடுமையான எலும்பு முறிவுக்கு ஆளாகியுள்ளார்.
இச்சம்பவம் குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாநில DAP தலைவர்களான ராம் கர்பால் சிங், RSN ராயர் மற்றும் செனட்டர் Dr. லிங்கேஸ்வரன் ஆர். அருணாச்சலம் உடனடியாக பினாங்கு மருத்துவமனைக்கு விரைந்து தாரா ஸ்ரீயின் நிலையை நேரில் பார்வையிட்டனர்.
உடனடி சிகிச்சை செலவு உள்ளிட்டவற்றைச் சமாளிக்க ஏதுவாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், தாரா ஸ்ரீயின் பெற்றோர் தங்குவதற்காக பினாங்கு மருத்துவமனையின் Anjung Kasih-வில் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மருத்துவர்கள் விரைவாகச் செயல்பட்டு, அதே இரவில் சிறுமியின் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர்.
தற்போது தாரா ஸ்ரீ தீவிர கண்காணிப்பில் உள்ளார்; தொடர்ந்து சிகிச்சை, உடற்பயிற்சி மற்றும் குடும்ப, சமூக ஆதரவு அவசியமாகும்.
தாரா ஸ்ரீ வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்; அவரின் தந்தை பாதுகாவலராகவும், தாய் இல்லத்தரசியாகவும் உள்ளனர்.
இப்படிப் பட்ட நிலையில் இந்த விபத்து குடும்பத்திற்கு மனதளவிலும் பொருளாதார அளவிலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அறப்பணி வாரியம் தாரா ஸ்ரீயின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கும் என லிங்கேஷ்வரன் கூறினார்.
சிறுமி விரைவிலேயே குணமடைந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம் எனக் கூறிய அவர், மக்கள் குறிப்பாக விழாக்காலங்களில் சாலைகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.



