
கோலாலம்பூர், பிப்ரவரி-5 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர்களான இந்நாட்டு இந்தியர்கள், தாங்கள் தொடந்து புறக்கணிக்கப் படுவதாகக் கருதுகின்றனர்.
அவர்களின் விரக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; எனவே அவர்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை, அதுவும் விரைந்து எடுக்க வேண்டும் என பினாங்கு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேட்டுக் கொண்டார்.
இந்தியச் சமூகம் தொடர்பான பல விவகாரங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கவனிப்புக் கிடைப்பதில்லை.
குறிப்பாக முக்கிய அடையாளமாகத் திகழும் தமிழ்ப் பள்ளிகள்….
பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி, பஹாங் லாடாங் ஜெராம் தமிழ்ப்பள்ளி, கெடா லாடாங் கெத்தும்பார் தமிழ்ப்பள்ளி போன்றவை இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றன.
இப்படியே இழுத்தடிக்காமல் அவை சீக்கிரம் கட்டி முடிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
இவ்வேளையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென, அதன் தலைவருமான ராயர் கேட்டுக் கொண்டார்.
பினாங்கில் தண்ணீர் மலை பால தண்டாயுதபாணி கோயில் உட்பட 15 கோயில்களை அறப்பணி வாரியம் பராமரிக்கிறது.
இந்நிலையில் தண்ணீர் மலை உச்சியை அடைவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் வசதி செய்து தரும் நோக்கில் கேபிள் கார் திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனை நிறைவேற்றிக் கொடுக்க மத்திய அரசு மனது வைக்க வேண்டும்.
பினாங்கு இந்தியர்கள் பிரதமர் அன்வார் மற்றும் பக்காத்தான் கூட்டணியின் நிரந்தர வாக்கு வங்கியாக இருப்பதால், அதில் உரிய உதவியை வழங்கி அவர்களின் மனம் குளிர வைக்க வேண்டும்.
இதே போன்று நாடளாவிய நிலையில் இந்தியச் சமூகத்தின் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு கண்டு, அவர்களை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென அந்த DAP MP கேட்டுக் கொண்டார்.
மக்களவையில் அரச உரை மீதான விவாதத்தில் நேற்று பங்கேற்று பேசிய போது ராயர் அதனை வலியுறுத்தினார்.