
புத்ராஜெயா, மார்ச்-20 – ஊழல் வழக்கில் தாம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சடிக் சையிட் அப்துல் ரகுமான் செய்துள்ள மேல்முறையீட்டு விசாரணை, ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிரதிவாதி சார்பில் வாதிட்டுக் கொண்டிருந்த அரசாங்க துணைத் தலைமை வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருடின் வான் லாடின், திடீரென தொண்டை வலிக்கு ஆளாகி ‘குரலை இழந்தததே’ அதற்குக் காரணம்.
காலையிலிருந்தே தொண்டை வலியால் அவதிப்படுவதாகவும், இன்னும் நிறைய வாதங்களை முன் வைக்க வேண்டியுள்ளதால், குறைந்தது 45 நிமிடங்களாவது தமக்குத் தேவையென்றும் அவர் நீதிபதிகள் குழுவிடம் கூறினார்.
எனவே, ஹரி ராயா பெருநாளுக்குப் பிறகு வாதங்களைத் தொடர தம்மை அனுமதிக்குமாறு ஷஹாருடின் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் குழு அறிவித்தது.
பெர்சாத்து கட்சியில் இருந்த போது அதன் இளைஞர் பிரிவான ARMADA-வின் நிதியைக் கையாடல் செய்த வழக்கில், 2023-ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் சையிட் சடிக்கிற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2 பிரம்படிகளும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்திருந்தது.
நம்பிக்கை மோசடி, நிதி மோசடி, பணச்சலவை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியே என தீர்ப்பளித்து, உயர் நீதிமன்றம் அத்தண்டனையை வழங்கியது.
அதனை எதிர்த்தே சையிட் சடிக் மேல்முறையீடு செய்துள்ளார்.