கோலாலம்பூர், ஜன 8 – நகர்ப்புறங்களில் வசிக்கும் பி 40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு தொழில் முனைவர் பயிற்சித் திட்டத்தின் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தை வீடமைப்பு ஊராட்சித்துறையின் துணையமைச்சர் டத்தோ அய்மான் அத்திரா
( Aiman Athirah ) தொடக்கி வைத்தார். இவ்வாண்டு முதல் மொத்தம் 29 அரசு சார்பற்ற அமைப்புகள் தொழில் முனைவர் திட்டத்தில் பங்கேற்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் நகர்ப்புற பொருளாதார சமூகத்தை வலுப்படுத்தும் திட்டத்தில் பயன் அடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை அமல்படுத் இவ்வாண்டு 11 மில்லியன் ரிங்கிட்டை வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு ஒதுக்கியுள்ளதாக அய்மான் கூறினார்.
பி 40 குடும்பங்களைச் சேர்ந்த 1,060 பங்கேற்பாளர்கள் இத்திட்டத்தில் பயன் அடைவார்கள் . மடானி அரசாங்கத்தின் மூலம் தீவிர வறுமை நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2013ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை நகர்ப்புற தொழில் முனைவர் திட்டத்திற்காக 16,955 பேருக்கு பயிற்சிஅளிப்பதற்காக மொத்தம் 174 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள பங்கேற்பாளர்களுக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு தொழில் முனைவர் பயிற்சிகளை பெறுவார்கள் . வர்த்தக மேலாண்மை மற்றும் தொழில் முனைவர் திறன்களை மேம்படுத்துவதற்கான திறனை பெறுவதன் மூலம் அவர்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என அய்மான் தெரிவித்தார்.