
சிலாங்கூர், ஆகஸ்ட் 4 – அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலேசிய கலைத்துறையின் மூத்த நகைச்சுவை நடிகரான 61 வயது சத்யாவை, தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யா, கால் விரல் பகுதியில் நடந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று வீடு திரும்பியிருக்கின்றார்.
“நான் இன்னும் நலமாக இருக்கிறேன். இன்னும் சில கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். முதலில் வீடு திரும்பியதும் எனது பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்” என நகைச்சுவையாக துணையமைச்சரிடம் பேசியுள்ளார் சத்யா.
கடந்த வருடம் ஜூலை மாதம், அவர் கோலாலும்பூர் மருத்துவமனையில் திடீர் பக்கவாதத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே, “தனது கலைத்துறை பணியில் தற்போது தற்காலிகமாக ஈடுபடாமல் இருந்தாலும், மன உறுதியோடு சத்யா இருக்கிறார். விரைவில் அவர் நலம் பெற்று வர நாம் அனைவரும் பிராத்திப்போம்.” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
மலேசிய தேசியத் திரைப்பட நிறுவனமான (Finas) ஏற்பாடு செய்த கலைஞர்களுக்கான நலத்திட்ட வருகையின் கீழ் சத்யாவுக்கு நலத்தொகையும், பழவகைகள் கொண்ட கூடை ஒன்றையும் துணையமைச்சர் வழங்கினார்.
இந்த நலத்திட்டத்திலிருந்து உதவி பெற விரும்பும் மலேசிய கலைஞர்கள், பினாஸ் நலக்குழுவை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தியோ குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், கடந்த ஜூலை 31 வரை, Finas எதிர்பார்த்த 100 இலக்கைத் தாண்டி, 112 கலைஞர்களுக்கு இந்த சிறப்பு உதவியை வழங்கப்பட்டிருபதாக அமைச்சர் கூறினார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, துணையமைச்சர் தலைநகரிலுள்ள நடிகர் சத்யாவின் வீட்டில் நேரில் சந்தித்து, சில உதவிகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.