
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – KLIA விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் 12 வெளிநாட்டுக் கடப்பிதழ்களுடன் சிக்கிய சம்பவத்தில் போதுமான நடவடிக்கை இல்லையென DAP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார்.
இதுவே சாதாரண குடிமகனாக இருந்திருந்தால் இந்நேரம் அவரை விசாரணைக்குத் தடுத்து வைத்திருப்பீர் என, கெப்போங் எம்.பி லிம் லிப் எங் கூறினார்.
தேசியப் பாதுகாப்புப் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டால் மட்டும், அவர்களுக்கு சாதகமாகவே அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
இது திறமையற்றது மட்டுமல்ல, தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் பண்பில்லாத பழக்கமாகும்.
மக்கள் கேட்பது உண்மையான பதில்களை; ஒன்றுக்கும் உதவாத உள்கட்ட மறு ஆய்வை அல்ல என, மலேசியா கினியிடம் லிப் எங் காட்டமாகக் கூறினார்.
சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகே அதிகாரத் தரப்பிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முழு விசாரணைக்கு வழி விடாமல், போலீஸும் இது ஒரு துறை சார்ந்த உள் விவகாரம் என முடிவுக்கு வந்துள்ளது.
அப்படியானால், உயர் மட்ட அளவில் விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி நடக்கிறதா என லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.
ஜனவரி 1-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் நெறிமுறை விசாரணையைத் தொடக்கியிருப்பதாக, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Zakaria Shaaban முன்னதாகக் கூறியிருந்தார்.
அது துறை சார்ந்த விஷயம் என்றும் அவர் சொன்னார்.
விசாரணைக்கு வழிவிட ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரி, KLIA குடிநுழைவுத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.