
புது டெல்லி, ஜனவரி-26இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா, பத்ம விபூஷண் ஆகியவற்றுக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருது இதுவாகும்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய சேவைக்காக 75 வயது மம்முட்டி அவ்விருதைப் பெறுகிறார்.
மம்முட்டிக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டதை முதல் ஆளாக X தளத்தில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார் அவரின் பிரியத்திற்குரிய நண்பர் கமல்ஹாசன்.
இருவரும் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை என்றாலும், ஒருவரை ஒருவர் தூரத்திலிருந்தே இரசித்தும் விமர்ச்சித்தும் வருவதாக கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், நடிகர் மாதவனுக்கு நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளாகவே மிகச் சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் தன்னை உயர்த்திக் கொண்டுள்ள மாதவனுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இலக்கியம் மற்றும் கலைப் பிரிவில் பிரபல பெண் எழுத்தாளர் சிவசங்கரிக்கு பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், அண்மையில் மறைந்த போலிவூட் நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும் பத்ம ஸ்ரீ பெறுகிறார்.
கடந்தாண்டு விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.
அனைவரும் இந்திய அதிபர் திரௌபதி முர்முவிடமிருந்து விரைவில் விருதுகளைப் பெற்றுக் கொள்வர்.



