
கிள்ளான், நவம்பர்-5 – தீபாவளியின் ஒளி ஒவ்வொருவரின் மனதிலும் நம்பிக்கையின் தீப்பொறியை ஏற்றும்.
இவ்வாண்டு, அந்த ஒளி கிள்ளானில் ஒரு சிறிய வீட்டில் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் இதயத்திலும் பிரகாசித்தது.
கிள்ளான் சென்ட்ரல் ரோட்டரி கிளப், அதன் “Lights of Hope” திட்டத்தின் மூலம், அக்டோபர் 18-ஆம் தேதி ஒரு மூதாட்டியிடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட வீட்டை ஒப்படைத்தது.
தீபாவளிக்கு, அந்த வீட்டின் ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு விளக்கும் மனித நேயத்தின் ஒளியைப் பிரதிபலித்தது.
63 வயது அம்மூதாட்டி, படுத்தப் படுக்கையாக உள்ள தனது கணவர் மற்றும் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 4 பேரக்குழந்தைகளைக் கரைசேர்ப்பதற்காக, இந்த வயதிலும் பள்ளி துப்புரவுப் பணியாளராக உழைத்து, அவர்களைத் தாங்கி வருகிறார்.
இன்று அவரது கண்களில் மின்னும் கண்ணீர் வேதனையின் அல்ல, நன்றியின் ஒளி…
கிள்ளான் Inner Wheel Club மற்றும் பல வர்த்தக பங்காளிகள் இணைந்து செய்த இந்த மனிதநேய முயற்சி, வீட்டை மட்டுமல்ல, அவர்களின் மனதையும் புதுப்பித்தது.
புதிய சுவர்கள், சாயம், விளக்குகள், தளவாடங்கள், ஒரு புதிய சாமி மேடை என அனைத்தும் அக்குடும்பத்துக்கு புதியத் தொடக்கத்தை அளித்துள்ளன.
“இது ஒரு வீடு அல்ல, ஒரு நம்பிக்கையின் அடையாளம்” என்று கிளப்பின் தலைவர் மகேந்திரன் மாரிமுத்து உருக்கமாகக் கூறினார்.
“நாம் சேர்ந்து செய்த சிறு முயற்சிகள், ஒருவரின் வாழ்க்கையை முழுவதும் மாற்றிவிட முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது. ஒவ்வொரு வீட்டும் ஒரு கனவு, ஒவ்வொரு குடும்பமும் ஒரு எதிர்காலம்” என்றார் அவர்.
தீபாவளியின் ஒளி வெளியில் மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தின் உள்ளத்திலும் இனி என்றும் பிரகாசிக்கும்.



