
சியோல், ஏப்ரல்-4- கடந்தாண்டு இராணுவச் சட்டங்களை அமுல்படுத்த முயன்று தோல்வி கண்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
தென் கொரியாவின் உச்ச அதிகாரத்திலிருந்து அவரை நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்கனவே நிறைவேற்றியிருந்த நிலையில், அதனை மறு உறுதிப் படுத்தும் விதமாக நீதிமன்றத்தின் முடிவு அமைந்துள்ளது.
இதன் மூலம், தென் கொரியாவின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான அரசியல் நெருக்கடிக்கு வித்திட்ட அதிபர் யூனின் ஆட்சிக் காலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
பதவிப் பறிப்போனதால், கிளர்ச்சியைத் தூண்டியதன் பேரில் 64 வயது யூன் மீது குற்றவியல் விசாரணையும் தொடங்கவுள்ளது.
எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கடந்தாண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இராணுவச் சட்டத்தை யூன் அமுல்படுத்த முயன்றதால் அங்கு சட்ட நெருக்கடி ஏற்பட்டது.
பல போராட்டங்களுக்குப் பிறகு ஜனவரி 15-ஆம் தேதி கைதான போது, தென் கொரிய வரலாற்றிலேயே அதிபராக இருக்கும் போதே கைதான முதல் நபராக யூன் பெயர் பதித்தார்.
எனினும், நீதிமன்றம் கைது ஆணையை இரத்துச் செய்ததும் அவர் மார்ச்சில் விடுதலையானார்.
அதிபர் முறைப்படி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தென் கொரிய அரசமைப்பு விதிகளின் படி,
அடுத்த 60 நாட்களுக்குள் அங்கு அதிபர் தேர்தல் நடந்தாக வேண்டும்.
புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்கும் வரை, நடப்புப் பிரதமர் ஹான் டுக் சூ (Han Duck-soo) இடைக்கால அதிபராகப் பணியாற்றி வருவார்.