கோலாலம்பூர், அக் 15 – ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப புதன்கிழமைதோறும் சீனியை பயன்படுத்தாத திட்டம் மலேசிய நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பப்படும் என சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் (Johari Abdul ) தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தில்
நாடாளுமன்ற பணியாளர்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும்
உட்படுத்தப்படுவார்கள் என இன்று மக்களவையில் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டின் பொது சுகாதாரத்திற்காக புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்தும் சட்டம் இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றதன் மூலம் அந்த சட்டத்தின் விதிமுறைகள் அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள தகவலையும் ஜொஹாரி வெளியிட்டார்.
இதன்மூலம் மலேசிய நாடாளுமன்ற கட்டிடம் உட்பட 28 இடங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிரான தடை அமலுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து மூன்று மீட்டர் தூரத்திற்கு அப்பால் புகைப்பிடிப்பது மற்றும் மின் சிகரெட்டை பயன்படுத்துவதற்கான விதிகளை சுகாதார அமைச்சு
நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டி விடுதி மற்றும் நிர்வாக கட்டிடப்பகுதிக்கு முன் மூன்று இடங்களை நாடாளுமன்ற நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாகவும் ஜொஹாரி தெரிவித்தார்.