
கோலாலம்பூர்,மார்ச்-30- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உரைகளில் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர் யுனெஸ்வரன்.
மக்களவையில் பேசப்படும் அனைத்தும் அதிகாரப்பூர்வ பதிவான ஹான்சார்டில் நீண்ட காலம் பதியப்படுவதால், அதன் விளைவுகளும் தொடர்ந்து இருக்கலாம் என்றார் அவர்.
இந்த விவகாரம் அமைச்சரவையின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புசாட் கோமாஸ் வெளியிட்ட 2025 இனவெறி அறிக்கையில், கடந்த ஆண்டு நாடாளுமன்ற அமர்வுகளில் 43 இனவெறி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக அரசியலமைப்பின் 153-வது பிரிவு தொடர்பான விவாதங்கள் முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், இணையத்தில் காணப்படும் வெறுப்புரைகளில் சுமார் 70% AI மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், போலி கணக்குகள் மூலம் தூண்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை சட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், இன மற்றும் மத ஒற்றுமையை வலுப்படுத்த சட்ட அமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.



