
சிம்பாங் பூலாய், செப்டம்பர்-8- பேராக் சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய ஆடவனது காருக்குள், 62 வயது மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று அதிகாலை அங்குள்ள செம்பனைத் தோட்டமொன்றில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக, மாநில போலீஸ் தலைவர் Noor Hisham Nordin கூறினார்.
சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட Toyota Avanza காரை சோதனைக்காக ஒரு போலீஸ்காரர் நிறுத்த முயன்றார்; ஆனால், காரை நிறுத்தாமல் அந்நபர் வேகமாக ஓட்டிச் சென்று, செம்பனை தோட்டமருகே நிறுத்தினார்.
விரட்டிச் சென்று பிடித்த போலீஸ்காரருடன் மல்லுக்கட்டிய சந்தேக நபர், திடீரென அவரின் கைத்துப்பாக்கியைக் கைப்பற்றி அவரை சுட்டு விட்டான்; பின்னர் கத்தியால் குத்தி விட்டு காரை அங்கேயே விட்டு விட்டு துப்பாக்கியுடன் தப்பியோடினான்.
காயமடைந்த 26 வயது போலீஸ்காரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அக்காரில் சோதனையிட்ட போது, பின்னிருக்கையில் தலை பிளாஸ்டிக் பையால் மூடப்பட்ட நிலையில் மூதாட்டி இறந்துகிடந்தார்.அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தது சவப்பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், ஒரு பெண் உட்பட 6 பேரைக் கைதுச் செய்தனர்.முக்கிய சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களில் அடங்குவர்.



