
ஜோர்ஜ்டவுன், நவம்பர் 19-பினாங்கில், நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்க வேண்டும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக கல்வி அமைச்சிடம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்குமாறு அவர் மாநில அரசைக் கேட்டுக்கொண்டார்.
அது தொடர்பில் மாநில கல்வி இலாகா, செபராங் பிறை மாநகர மன்றம், பினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழு ஆகியவை இணைந்து சாத்தியக்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என்றார் அவர்.
பாடத்திட்டம், நிர்வாகம், கட்டமைப்பு வசதிகள் குறித்து கல்வி அமைச்சுடன் ஆலோசனை நடத்த மாநில அரசு முன்வரலாம் என, பினாங்கு சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பேசியபோது குமரன் சொன்னார்.
நிலையான மற்றும் கணிசமான தமிழ் மாணவர் எண்ணிக்கை, முன்னேற்றமான மாநிலக் கல்வி முறை, தாய்மொழிக் கல்விக்கான அரசாங்கத்தின் கடப்பாடு, தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுவின் ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டால், இந்த முதல் தமிழ் இடைநிலைப் பள்ளித் திட்டத்தை முன்னெடுக்க பினாங்கே சிறந்தத் தேர்வாக இருக்கும் என அவர் கூறினார்.
தமிழ்ப் பள்ளி வளர்ச்சிக்காக தனது பாகான் டாலாம் தொகுதியிலேயே ஏற்கனவே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதால்,
SMT Bagan Dalam அல்லது பாகான் டாலாம் தமிழ் இடைநிலைப்பள்ளி எனும் முன்மாதிரி பள்ளியை தொடங்கலாம் என அவர் தெரிவித்தார்.
இது வெறும் கனவு அல்ல, தமிழ் மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பு வழங்குவதை உறுதிச் செய்வதற்கு அவசியமான ஒன்றென அவர் வலியுறுத்தினார்.



