
கோலாலம்பூர், ஜனவரி 12 – கல்வித்துறை நாட்டின் முதன்மை முன்னுரிமையாகவே தொடரும் என்றும், வெறும் கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மட்டும் கல்வி வெற்றிக்கு போதாது என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
முகநூல் பதிவில் அவர், அரசு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பே, குழந்தைகள் முழுமையான ஆதரவைப் பெறுவதற்கான முக்கிய அடித்தளம் என தெரிவித்தார். பள்ளியிலும் வீட்டிலும் ஒரே மாதிரியான ஆதரவு கிடைத்தாலே மாணவர்கள் சிறந்து வளர முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய கல்வியாண்டைத் தொடங்கும் சிறுவர்களை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த அவர், ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரின் நம்பிக்கையையும், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பையும், நாட்டின் எதிர்கால கனவுகளையும் சுமந்து செல்கிறது என்றார். மதிப்புகளும் மனிதநேயமும் கொண்ட தரமான கல்வி அறிவுள்ள, நல்லொழுக்கம் கொண்ட தலைமுறையை உருவாக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக, பிரதமர் தனது மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸீசா வான் இஸ்மாயில் உடன், 2026 கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளி தொடக்க உதவியைக் (BAP) கண்காணிக்க Sg Besi தேசிய பள்ளி, Kwong Hon சீனப்பள்ளி மற்றும் Sg Besi தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளைப் பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



