நியூ காசல் நோய்; குருவிக் கூடுகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைக்க மலேசியாவிடம் சீனா கோரிக்கை
பெய்ஜிங், ஜனவரி-1, குருவிக் கூடுகளின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மலேசியாவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
DVS எனப்படும் மலேசியக் கால்நடை சேவைத் துறை வாயிலாக டிசம்பர் 20-ஆம் தேதி அக்கோரிக்கைச் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்தாண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மலேசியப் பண்ணைகளில் கோழிகள் மற்றும் வாத்துகளிடையே நியூகாசல் நோய் கண்டறியப்பட்டதே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
ND என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நியூகாசல் நோய் கிருமி காற்று, நீர் மற்றும் உணவுகளிள் வாயிலாகப் பரவக் கூடியதாகும்.
எனினும் தாங்கள் கண்காணித்த வரை , குருவிக் கூடுகள் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்களில் அந்நோய் பரவல் எதுவும் இல்லையென DVS தெளிவுப்படுத்தியது.
இந்த தற்காலிகத் தடைக்கான தீர்வு குறித்து குருவிக் கூடு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் பேசி வருவதாகவும் DVS கூறிற்று.
அனைத்துலக ஏற்றுமதித் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிச் செய்வதிலும், உள்ளூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் உறுதியாக இருப்பதாக DVS அறிக்கையொன்றில் கூறியது.
Edibles Bird’s Nest எனப்படும் குருவிக் கூடுகள் சீனர்கள் மத்தியில் பிரபலமான அரிய பழங்கால உணவாகும்.
அது உடலுக்கு பல நன்மைகளைக் கொண்டு வருமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.