
மலாக்கா , ஜூலை 21 – மலாக்காவில் நீச்சல் குளத்தில் மூழ்கிய ஏழு வயது சிறுவன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குப் பிறகு இறந்தான். குடும்பத்தோடு விடுமுறை நாளில் உல்லாசப் பயணம் சென்ற ஒரு குடும்பத்திற்கு இந்த துயரச் சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
மரணம் அடைந்த சிறுவனின் தந்தை இன்று காலையில் தனது Tik Tok கில் கணக்கில் பதிவேற்றம் செய்த வீடியோவில் இந்த வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். இறைவன் என் மகன் மீது அதிகமாக அன்பு செலுத்தியதால் அவனை அழைத்துக் கொண்டார். அவனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லடக்கம் செய்வதற்கு முன் தனது மகனின் நல்லுடல் ஜோகூர் பாசீர் கூடாங், Taman Rinting கிலுள்ள தனது குடும்பத்தின் இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என அவர் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் Kota Laksamana, Taman Kota Shahbandar ரிலுள்ள அடுக்ககத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது அங்கிருந்த அச்சிறுவன் மூழ்கியதாக இதற்கு முன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நேற்று காலை மணி 9.45 அளவில் இது குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மூன்று தீயணைப்பு வண்டிகள் மற்றும் அவசர மீட்பு சேவை வேனும் அனுப்பிவைக்கப்பட்டதோடு மீட்கப்பட்ட அச்சிறுவன் சுயநினைவின்றி இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு நடவடிக்கைக்கான மூத்த அதிகாரி முகமட் ஸாஹெரி முகமட் ஜைலானி ( Mohamad Zahery Mohd Zailani) தெரிவித்தார்.