கோலாலம்பூர், நவ 19 – நைரோப்பிக்கான தனது முதலாவது விமானச் சேவையை ஏர் ஆசியா X தொடங்கியதன் மூலம் ஆப்பிரிக்கா வட்டாரத்திற்கான எல்லைகளை விரிவுபடுத்துகிறது. இந்த வழித்தடத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் கென்யாவின் தலைநகருக்கு மலிவு விலையில், நேரடி இணைப்பை ஏர் ஆசியா X மேம்படுத்துகிறது. நேரோபிக்கு பயணம் மேற்கொள்ளும் மலேசியாவின் ஒரே விமான நிறுவனமாகவும் ஆசியானிலிருந்து அந்த ஆப்பிரிக்க நகருக்கு செல்லும் முதலாவது குறைந்த கட்டண விமான நிறுவனமாகவும் ஏர் ஆசியா X விளங்குகிறது என இன்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இதன்வழி வளர்ந்து வரும் தனது சேவையின் விரிவாக்கத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லை ஏர் ஆசியா X பதிவுசெய்துள்ளதோடு கோலாலம்பூரில் இருந்து நைரோபிக்கு அதன் தொடக்க நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிறுவனம் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையங்களில் சிறந்த ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இணைப்பை விரிவுபடுத்துவதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் ஏர் ஆசியா X நிருபித்துள்ளது.