
கொலராடோ, மார்ச்-25 – உண்மையிலேயே படு மோசமாக உள்ளதாக டோனல்ட் டிரம்ப் கூறிய அவரது உருவப்படம் அகற்றப்படும் என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலராடோ மாநில அரசு செயலகக் கட்டடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பிரிட்டிஷ் கலைஞர் சாரா போர்ட்மேன் (Sarah Boardman) வரைந்த அந்த உருவப்படம், “வேண்டுமென்றே சிதைக்கப்பட்டதாக” அந்த அமெரிக்க அதிபர் முன்னதாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.
தங்களின் உருவப்படம் பொறித்த ஓவியங்கள் மோசமாக இருப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள்; அதில் நான் மட்டும் விதிவிலக்கா என டிரம்ப் கேட்டார்.
அதே ஓவியக் கலைஞர் தான் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவை அற்புதமாக வரைந்திருந்தார்.
ஆனால் என்னுடைய படத்தை ‘சிதைத்து விட்டார்’ என டிரம்ப் தனது Truth Social சமூக ஊடகப் பதிவில் கூறினார்.
வயதாகி விட்டதால் ஒருவேளை அவரின் ஓவியத் திறமை மங்கியிருக்கலாம் என்றும், தனக்கே உரிய நக்கல் பாணியில் டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எதற்கு வீண் வம்பு என அந்த எண்ணெய் ஓவியத்தை அகற்றுவதாக மாநில அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.