கோலாலம்பூர், அக்டோபர்-19 – 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக RM130 million ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதா என, உரிமைக் கட்சியின் தலைவர் Dr பி.ராமசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
இஸ்லாமிய விவகாரங்களுக்கு RM2 billion ஒதுக்கப்பட்டதுடன் ஒப்பிட்டால் RM130 million எந்த மூலை என அவர் கேட்டார்.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதை நாம் கேள்விக் கேட்கவில்லை.
இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை நியாயமானதா என்பதே நமது கேள்வியென்றார் அவர்.
பட்ஜெட் தாக்கலின் போது கடந்தாண்டைப் போலவே இம்முறையும் திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கைத்தட்டல் பெற்றார்.
அதில் காட்டிய ஆர்வத்தையும் வேகத்தையும் இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் காட்டி நியாயப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என ராமசாமி சொன்னார்.
ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் இந்தியச் சமூகம் ஏமாற்றமடைவது வாடிக்கையாகிவிட்டது.
முந்தையப் பிரதமர்களை விட அன்வார் ஒன்றும் வேறுபட்டு நிற்கவில்லை.
ஆனால் அவர்களை விட இவர் தம்மை புத்திசாலித்தனமாக மக்களிடத்தில் முன்னிலைப்படுத்துகிறார் என ராமசாமி சாடினார்.
ஆனால் வழக்கம் போல் இது மக்கள் பட்ஜெட் என DAP, PKR தலைவர்கள் புகழாரம் சூட்டி வருவது நகைப்புக்குரியது என்றார் அவர்.