கிள்ளான், பண்டமாரானில் இந்தியருக்குச் சொந்தமான பங்களா வீட்டிலிருந்து 6 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையிட்ட ஆயுதமேந்திய கும்பல் போலீசிடம் சிக்கியுள்ளது.
இதுவரை 8 பேர் கைதாகியுள்ளதாக போலீஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி Berita Harian செய்தி வெளியிட்டுள்ளது.
கைதான முதல் சந்தேக நபரான 23 வயது இளைஞன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவனது சகா கிள்ளானில் சிக்கினான்.
மேலும் துப்புத் துலங்கிய போலீஸ், நெகிரி செம்பிலானில் வைத்து இன்னும் அறுவரைக் கைதுச் செய்தது.
கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
எஞ்சியவர்களையும் தேடிப் பிடிக்கும் பணிகளை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், 2 கார்களில் வந்த 10 முதல் 12 முகமூடி கொள்ளையர்கள் சுவரேறி குதித்து வீட்டுக்குள் நுழைவது CCTV கேமராவில் பதிவானது.
கொள்ளையன் ஒருவன் பாராங் கத்தியால் வெட்டியதில், அவ்வீட்டைச் சேர்ந்த 37 வயது நபருக்கு தோளில் தையல்கள் போடப்பட்டன.
ரொக்கப் பணம், நகைகள், சாமி சிலைகள் என கொள்ளையிடப்பட்டப் பொருட்களின் மொத்த மதிப்பு 6 லட்சம் ரிங்கிட்டாகும்.