
சுபாங் ஜெயா, ஏப்ரல்-24- சிலாங்கூர், சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நேற்று அதிகாலை பாராங் கத்தி கும்பல் தாக்கியதில், ஓர் ஆடவர் இடது கைவிரல்கள் ஐந்தையும் இழந்தார்.
அதிகாலை 1.54 மணிக்கு ஜாலான் PJS 11/2-டில் ஓர் உணவகத்தில் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு அவர் வீட்டுக்குக் கிளம்பிய போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
திடீரென Toyota Vios காரில் வந்திறங்கிய 5 பேரடங்கிய முகமூடி கும்பல், பாராங் மற்றும் வாள் கத்தியால் அவ்வாடவரை சரமாரியாக வெட்டியது.
தப்பித்து ஓடி முடியாததால், கை, கால் மற்றும் முதுகில் 30 வயது அந்நபர் படு காயமடைந்தார்.
வெட்டி விட்டு சந்தேக நபர்கள் அதே காரில் தப்பியோடினர்.
பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 5 விரல்களையும் பறிகொடுத்தார்.
அவரின் நண்பர்களுக்கு காயமேதும் ஏற்படவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு உதவுமாறு சுபாங் ஜெயா போலீஸ் கேட்டுக் கொண்டது.
சாட்சிகளின் இரகசியம் காக்கப்படுமென்றும் போலீஸ் உத்தரவாதம் அளித்தது.