
பத்து மலை, ஜனவரி-28 – பத்து மலை ஆற்றங்கரையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் 20 அடி உயர தற்காலிக வேல் நிறுவப்பட்டது.
தைப்பூச விழாவை முன்னிட்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பக்தர்களுக்கு துணையாக, கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் வேல் நிறுவப்பட்டதாக, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
பிப்ரவரி 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தைப்பூச விழாவை முன்னிட்டு, பக்தர்கள் முன்கூட்டியே தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்றங்கரையிலிருந்து பால் குடம், காவடிகளை ஏந்தி வரும் பக்தர்கள், இந்த வேலை வழிப்பட்டு மேல் குகைக்குச் செல்லாம்.
இவ்வேளையில், வெள்ளி இரதம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி இரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து, பத்து மலையை நோக்கிப் புறப்படுகிறது.
மறுநாள் இரதம் பத்து மலையை சென்றந்தடைந்ததும் சேவற்கொடி ஏற்றப்பட்டு தைப்பூசம் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என நடராஜா சொன்னார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, ஜனவரி 30-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்து மலைக்கு சிறப்பு வருகைப் புரிகிறார்.
அவரை வரவேற்க தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
என்றபோதிலும், இம்முறை பிரதமரிடம் எந்தவொரு புதியக் கோரிக்கைகளையும் தாங்கள் வைக்கப்போவதில்லை என, நடராஜா கூறினார்.
பத்து மலை மேம்பாட்டுக்காக ஏற்கனவே சில கோரிக்கைகள் வைக்கப்பட்டு விட்டன; அவற்றுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்றே எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
வார இறுதி விடுமுறையில் வருவதால், இந்த தைப்பூச காலம் நெடுகிலும் மொத்தமாக 3.5 மில்லியன் பேர் பத்து மலைக்கு வருகைத் தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் வெள்ளத்தால் தைப்பூசம் களைக் கட்டும் எனக் கூறிய அவர், கூட்டத்தில் பிள்ளைகள் காணாமல் போவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.
குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசாமல், தைப்பூசத்தை சுத்தமாக கொண்டாட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



