
பத்து மலை, ஜனவரி-2 – பத்து மலை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி தேவஸ்தானத்தில் நேற்று இரு முடிக் கட்டு திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
சபரிமலைக்குச் செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள், மலேசிய சபரிமலை என அழைக்கப்படும் இந்த பத்து மலை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் சென்று, தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
சபரிமலை மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மற்றும் A.A.S ராமானுஜம் குருநாதர் ஸ்ரீ சடகோப ராமானுஜம் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
இவ்வாண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றதாக, ஐயப்பன் சுவாமி தேவஸ்தானத் தலைவர் யுவராஜா குருசாமி கூறினார்.
இவ்வேளையில், வரும் ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி திருவிழாவும் சிறப்பாக நடைபெறவிருப்பதாக அவர் சொன்னார்.
இரு முடி கட்டு விழாவில் நேர்த்திக் கடனைச் செலுத்திய பக்தர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.
கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், பக்திச் சூழலில் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்திய இவ்வைபவத்தால் புத்தாண்டு முதல் நாள் பத்து மலை மேலும் களைக் கட்டியது.



