அம்பாங் ஜெயா, அக்டோபர்-10 – காரினுள் வாந்தி எடுத்ததை கண்டித்த e-hailing ஒட்டுநருக்கு வாயில் குத்து விழுந்திருக்கிறது.
கடந்த ஞாயிறன்று அம்பாங் ஜெயா, கம்போங் ச்செராஸ் பாரு அடுக்குமாடி முன்பு அச்சம்பவம் நிகழ்ந்தது.
50 வயது e-hailing ஓட்டுநர், அன்று நள்ளிரவில் கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலிலிருந்து ஓர் ஆடவரையும் ஒரு பெண்ணையும் தனது காரில் ஏற்றினார்.
பயணத்தின் போது அந்த வெளிநாட்டு ஆடவர் காரினுள் வாந்தி எடுத்ததால், அவரை ஓட்டுநர் கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்ததாக நம்பப்படும் இரு பயணிகளும், தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஓட்டுநரை கீழே தள்ளி விட்டு வாயில் குத்தினர்.
அதில் புகார்தாரருக்கு வாயில் காயமும் வலது கை முட்டியிலும் உள்ளங்கையிலும் வீக்கமும் ஏற்பட்டது.
அந்த Honda City காரின் இடது பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்தியதோடு வலப்பக்க கதவையும் அவர்கள் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.
புகார் கிடைத்த போலீஸ் மறுநாள் காலையில் முறையே 30, 40 வயது இரு பயணிகளையும் கைதுச் செய்தது.
இருவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.