வாஷிங்டன், செப்டம்பர் -20, கேபினில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உள்நாட்டு பயணத்தின் போது விமானம் அவசரமாகத் தரையிறங்கிய சம்பவத்திற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த Delta விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
செப்டம்பர் 15-ல் நிகழ்ந்த சம்பவத்தின் போது, 140 பயணிகளுடன் சென்ற விமானத்தால் 10,000 அடி உயரத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து விமானம் அவசரமாகத் தரையிறங்கி பயணிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
என்றாலும், ஏற்பட்ட அசௌகரியத்துக்காக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக Delta தெரிவித்தது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பயணிகள் வலியால் தலையைப் பிடித்துக் கொண்டதாகவும், அவர்களின் காதுகள் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்ததாகவும், முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதிலொரு பயணி, தனது காதில் ஏதோ குத்துவது போன்ற வலியை உணர்ந்ததாகவும், காதில் கை வைத்துப் பார்த்தால் இரத்தமாக இருந்ததாகவும் தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார்.
எனினும் மேற்கண்டவை குறித்து Delta தனறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.