
கோத்தா பாரு, ஏப்ரல்-13-கிளந்தான், கோத்தா பாருவில் நேற்று பள்ளி வளாகத்திற்குள் வாகனம் மோதியதில் முதலாம் படிவ மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதியம் 1.50 மணியளவில் பெண்ணொருவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, Pengkalan Chepa-வில் உள்ள தஞ்சோங் மாஸ் இடைநிலைப் பள்ளியில் புகுந்தபோது இத்துயரம் நிகழ்ந்தது.
அதில் 13 வயது Nur Fatimatul Hawa Mohd Azaudin தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
உடனிருந்த அவரின் தோழி முதுகுப் பகுதியில் கடுமையாகக் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரை கொண்டு வந்த மோதியப் பெண்ணுக்குக் காயமேதும் இல்லை.
தோழிகள் இருவரும் சூராவில் தொழுகை முடிந்து வெளியே காலணியை அணியும் போது காரால் மோதப்பட்டனர்.
இவ்வேளையில், காரோட்டுநர் தவறுதலாக எண்ணெயை அழுத்தியதே விபத்துக்குக் காரணம் என்பது போலீஸார் மேற்கொண்ட தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உள் விசாரணைத் தொடங்கியிருப்பதை கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் உறுதிப்படுத்தினார்.
மாணவியின் அகால மரணத்திற்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குப் பிறகு, மாணவிகள் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டதும், மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் காரைத் தள்ளி அவர்களை மீட்க முயலும் காட்சிகள் அடங்கிய வீடியோ முன்னதாக வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தின.



