
சென்னை, பிப்ரவரி-5 – பழம் பெரும் நடிகையும், நடிகர் AVM ராஜனின் மனைவியுமான புஷ்பலதா சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 87.
கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் புஷ்பலதா.
பிறகு, தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்தார்.
அவர் நடித்த பல வெற்றிப் படங்களில் சாரதா , பார் மகளே பார் , நானும் ஒரு பெண் , யாருக்கு சொந்தம் , தாயே உனக்காக , கற்பூரம் , ஜீவனாம்சம் உள்ளிட்டவை அடங்கும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், பின்னர் ரஜினிகாந்துடன் நான் அடிமை இல்லை படத்திலும் கமல்ஹாசனுடன் சகலகலா வல்லவன் படத்திலும் நடித்திருந்தார்.
நானும் ஒரு பெண் என்ற படத்தில் AVM ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.
கடைசி காலத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.