தைப்பிங், அக் 16 – தங்களது ஆறு வயது மகளை சித்ரவதை செய்ததாக அதன் வளர்ப்புத் தாய் மற்றும் தந்தை மீது தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி நபிஷா இப்ராஹிம் ( Nabisha Ibrahim ) முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 48 வயதுடைய அப்துல் ரசாக் ஹருன் ( Abdul Razak Harun ) மற்றும் 33 வயதுடைய ஷரிபா மாட் யூசோப் ( Syarifah Mat Yusof ) ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அவ்விருவரும் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் 10அம் தேதிக்கிடையே, பாகான் செராய் தாமான் பெர்மாய் லாடாங் களும்பாங்கிலுள்ள வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 20,000 ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது 10 ஆண்டு சிறை அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் 2001 ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 31ஆவது விதி உட்பிரிவு (1) (a) யின் கீழ் அந்த தம்பதியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ பரிசோதனையின் அறிக்கைக்குப் பின்னரே அப்துல் ரசாக் மற்றும் ஷரிபா ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்படும் . அதே வேளையில் ஷரிபாவுக்கு மனநிலை பரிசோதனை மேற்கொள்வதற்கும் நிதிமன்றம் அனுமதி வழங்கியது.